ஒரு 30 அல்லது 40 வாக்குகளை வாங்கி ஒரு வார்டு பிரதிநிதியாகி விடுகிற ஒருவர் தோளில் ஒரு துண்டையும் வெள்ளை வேட்டியையும் அணிந்து கொண்டு செய்கிற அலம்பல் சில நேரங்களில் அறுவெறுக்க வைக்கிறது! சிலரை அச்சம் கொள்ளவும் வைக்கிறது! காக்கிச் சட்டை போட்டுவிட்டால் கை நீளுகிறது! அதிகார மேசையில் உட்கார்ந்துவிட்டால் பூமி அவர்களுக்கு கீழே சுற்றுகிறது!
இந்தியாவின் இரண்டாவது தலைமையமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஒரு முறை துணி நெய்யும் ஆலையை பார்வையிடச் சென்றார். ஆலை அதிபர், அங்கு நெய்த பல துணிகளை காட்டிக் கொண்டு வந்தார். “இங்கு நெய்த சேலைகளை காண்பியுங்கள்” என்றார். அவரும் காண்பித்தார். “விலை என்ன?” என்று கேட்டார். “1000” என்றார். “கொஞ்சம் மலிவானதாக காட்டுங்கள்” என்றார். 500, 400 க்கு வந்த பின்னரும் தன் நிலைக்கு அது அதிகமாகவே பட்டது! ஆலை அதிபர் சொன்னார், “பிரதமருக்கு இதெல்லாம் பரிசாகத் தரப்போகிறோம்” என்றார். சாஸ்திரி முற்றிலுமாக அதை மறுத்துவிட்டு இறுதியில் மிக மலிவான சேலைகளையே விலை கொடுத்து தன் மனைவிக்கு வாங்கிச் சென்றார். இப்படி அவர் வாழ்க்கையில் ஏராளமான நிகழ்வுகளைச் சொல்வார்கள். பிரதமரானாலும் தன் எளிமையை அவர் கைவிடவில்லை. பிரதமராக இருப்பதனால் எந்த சலுகையையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இன்றைக்கு சாதாரண அரசியல்வாதியோ உயரதிகாரியோ அப்படி ஒரு ஆலையைப் பார்த்தால், மொத்த ஆலைக்குமே அடிபோட்டு விடுவார்கள்!
பெரும்பாலோர் அதிகாரத்தை ஆணவத்தோடு கையாளுகிறார்கள். வெகுசிலரே எளிமையோடும் சேவைக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
மரியாள் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு!
மரியாளைப் பற்றி விவிலியத்தைவிட திருக்குரான் அற்புதமான பல செய்திகளைக் கூறுகிறது! அல்லாவால் அருளப்பட்ட மாமனுஷி என்றே அது அவளைக் கருதுகிறது! அப்படிப்பட்டவள் அன்றும் இன்றும் எளிமையின் கோலம் பூண்டே இருக்கிறாள்!
திருவிலிவியத்தில் அவள் ஓர்அமைதியின் பேழையாகவே காட்சியளிக்கிறாள்! சோகச் சூறாவளி அவள் இதயத்தை நார்நாராகக் கிழித்துத் தொங்கவிட்டபோதும் கூட அவைகளை இடிதாங்கி போல அவள் பொறுத்துக் கொள்கிறாள்!
அவளது கன்னிமை, கற்பு, அமல உற்பவம், வணக்கத்திற்குரியவளா இல்லையா போன்ற வறட்டு விவாதங்களில் மூளையை முற்றிலுமாக காலி செய்தவர்கள் இங்கு உண்டு! இற்றுப் போன இதயங்களிலிருந்து இறையியலை விற்றுக் கொண்டிருக்கிற வியாபாரிகள் இவர்கள்! அவர்களையும் சேர்த்தே அவள் அரவணைத்துக் கொள்கிறாள். அவர்களுக்கும் சேர்த்தே சிலுவையில் இயேசு, “இதோ உன் தாய்” என்று விட்டுச் செல்கிறார்!
மாதாவை ஏற்றுக் கொள்கிறவர்கள் வெறுப்பாளர்களாய் இருக்க முடியாது!
மாதாவை ஏற்றுக் கொள்கிறவர்கள் வன்முறையாளர்களாய் இருக்க முடியாது!
மாதாவை ஏற்றுக் கொள்கிறவர்கள் களவு செய்ய முடியாது, கையூட்டு பெற முடியாது!
மாதாவை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு திருக்குடும்பம் என்பது தன் குடும்பமே!
எப்படி மாதாவுக்கு தன் குடும்பம் என்பது நம் குடும்பத்தையும் உள்ளடக்கியதோ அது போன்றே உன் குடும்பம் என்பது விசாலமானதாய் இருக்கட்டும். ஏழைகளை இலலாதவர்களை சோர்வுற்றோரை எளியோரை உன்னவராக்கு! உன்னை அவர் தன்னவராக்கிக் கொள்வார்!ஆ
ஆக, தூய்மை என்பது துடைத்து எடுப்பதல்ல! நல்லவற்றால் நிரப்புவதே தூய்மை!
அருமை
ReplyDelete